ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160-க்கும் மேற்பட்ட உடல்களை அவர்களது உறவினர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. தண்டவாளத்தை சரி செய்து ரயில் போக்குவரத்திற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒடிசாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரண்டு வழித்தடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது” என்று கூறினார்.