“ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை” என ஒடிசாவிலிருந்து திரும்பிய அமைச்சர் ‘உதயநிதி ஸ்டாலின்’ தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160-க்கும் மேற்பட்ட உடல்களை அவர்களது உறவினர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. தண்டவாளத்தை சரி செய்து ரயில் போக்குவரத்திற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஒடிசாவில் மீட்புப் பணிகளை பார்வையிட்டு சென்னை திரும்பிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாலர்களை சந்தித்து பேசிய அவர், விபத்து நடந்த பகுதிகளில் முழுமையாக ஆய்வுசெய்து தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். அம்மாநில அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினோம். ஏதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிந்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை மத்திய அரசு செய்யும் என நம்புகிறோம். தமிழர்கள் குறித்த தெளிவான விவரங்கள் கிடைத்ததால் தமிழகம் திரும்பி உள்ளோம். எங்கள் குழுவுடன் வந்த அதிகாரிகள் அங்கு உள்ளனர். விரைவில் முழுமையான தகவல்கள் வரும் ஒரிசா அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது என்றார்.