பாகிஸ்தானில் உணவு விநியோகத்தின் போது ஏற்பட்ட சோகம் – கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் உணவு விநியோகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு,…

பாகிஸ்தானில் உணவு விநியோகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, அந்நாட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அன்றாடம் தேவைப்படும் அரிசி, கோதுமை, உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்! – இஸ்லாமியர்களுக்கு அரசு அளித்த சலுகை

இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று பொதுமக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்களை விநியோகம் செய்தது. இதனைப் பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய சில குழந்தைகளும், பெண்களும் மூச்சுத்திணறி, திடீரென மயக்கமடைந்து சுருண்டு விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி, 3 குழந்தைகள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, முறையான பாதுகாப்பு வசதிகளைச் செய்யாமல் இலவச ரேசன் பொருட்களை விநியோகம் செய்ததாக, தொண்டு நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.