மதுர மல்லி…மதுர மல்லி… பட்ஜெட் அறிவிப்பால் மகிழ்ந்த விவசாயிகள்!

மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த, தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் இன்று அறிவிப்பு வெளியிட்டதற்கு மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் டை இன்று…

மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த, தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் இன்று அறிவிப்பு வெளியிட்டதற்கு மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் டை இன்று தாக்கல் செய்தார். அப்போது, மல்லிகைக்கு புகழ்பெற்ற மதுரையை மையமாக வைத்து தொகுப்பு ஏற்படுத்துவது மிகவும் உகந்தது என கருதி, மதுரை மட்டுமன்றி விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் மல்லிகையின் உற்பத்தியை மேம்படுத்த மதுரை மல்லி இயக்கம் உருவாக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மல்லிகைப்பூக்கள் கிடைத்திடும் வகையில் ரூ.7 கோடி மதிப்பில் மதுரை மல்லி இயக்கம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

இந்த நிலையில், மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த, தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் இன்று அறிவிப்பு வெளியிட்டதற்கு மல்லிகை பூ விவசாயிகள் மனதார வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, மதுரை மாட்டுத்தாவணி பூ வணிக சங்கத் தலைவர் ஏ.வி.பிரபாகர் கூறுகையில் “மல்லிகை பூ விவசாயத்தை மேம்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் மல்லிகை பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மல்லிலை பூ விவசாயம் மேம்படுத்த அரசு நேரடியாக நடவடிக்கைகள் எடுப்பதால் தரமான பூக்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதற்கு தமிழக முதலமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருக்கு எங்களது நன்றிகள்” என கூறினார்.

இதேபோல், மதுரையை சேர்ந்த மல்லிகைப் பூ விவசாயி சந்தான கிருஷ்ணன் கூறுகையில் “மல்லிகை பூ வைத்து குடும்ப தொழில் செய்யப்பட்டு வருகிறது. மல்லிகை பூ விவசாயத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து உள்ளது வரவேற்க்கதக்கது. புதிய திட்டத்தால் மல்லிகை பூ விவசாயம் மேம்படும்” என கூறியதோடு, இந்த அறிவிப்பிற்கு தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.