மக்கள் நீதி மய்யம் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள கமல்ஹாசன் இந்த மாத இறுதியில் அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்ப உள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
பின்னர் செப்.17 ல் மநீம கட்சி சார்பில் கமல்ஹாசன் தலைமையில் மய்யம் மாதர் படை சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கமல்ஹாசன் ஒரு சுற்று பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணம் கோவையில் இருந்து தொடங்கலாம் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சுற்றுப்பயண தேதி இன்னும் உறுதியாகவில்லை.
அதே போல மாவட்ட வாரியாக அரசியலமைப்பு வளர்ச்சி திட்ட பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள மாவட்ட செயலாளர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மற்றும் கட்சிப் பணி என தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








