பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஆளுநர் உபசரிப்பு

தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சிறப்பு உபசரிப்பு. தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகள், கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட், பாராலிம்பிக்…

தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சிறப்பு உபசரிப்பு.

தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகள், கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட், பாராலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிறப்பு உபசரிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவி, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் A அணிக்காக வெண்கல பதக்கம் மற்றும் தனி நபர் போர்டு வெண்கல பதக்கம் வென்ற வைஷாலி, கிளாஸ்கோ டபுள்ஸ் போட்டியில் தங்கம் வென்ற ஸ்குவாஷ், வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கபிலன் மற்றும் அணியினர் (கேலோ இந்தியா வாலிபால்), பிரீத்திகா மற்றும் அணியினர் ( கேலோ இந்தியா), காமன்வெல்த் தொடரில் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற சத்யன் ஞானசேகரன், மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். சிறப்பு விருந்தினராக உலக சதுரங்க கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் இதில் பங்கேற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக எனக்கு அமைந்து இருக்கிறது. உங்களை போல பலரை பார்த்ததே எனக்கு மகிழ்ச்சி. 2008 ஆம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது நான் அங்கு இருந்தேன், ஒவ்வொரு நாட்களை கடந்த போதும் இந்தியா பதக்க பட்டியலில் இல்லை. கடைசியாக பத்து மீட்டர் துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா பதக்கம் வென்றதால் இந்தியா பதக்க பட்டியலில் ஒரு பதக்கத்துடன் நுழைந்தது. அபினவ் வெற்றி பெற்றபோது, அவரது வெற்றியை பகிர்ந்துகொள்ள அங்கு யாருமே இல்லை. நம் மக்கள் வரிப்பணத்தில் ஏற்பாடு செய்து உருவாக்கபப்ட்ட ஒரு வீரன் தன் இறுதி இலக்கை அடையும்போது அங்கு யாரும் இல்லாததை நான் விரும்பவில்லை. துரதிர்ஷ்டவிதமாக விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரையில் நம் நாடு எங்கு இருக்கவேண்டுமோ, அங்கு இல்லை.

தற்போது ஒரு வீரராக நீங்கள் விளையாடுகிறார்கள், பலரை வீடுகளில் அதைப் பற்றி பேச வைக்கிறீர்கள் நீங்கள் அனைவரும் சிறந்த தேசிய பணியை செய்கிறீர்கள்.இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 5 சதவிகிதம் பேரை நீங்கள் ஆச்சரியப் படுத்துகிறார்கள். அதனால் நல்ல எண்ணங்கள் தான் அனைத்திலும் பரவி இருக்க வேண்டும்.நல்ல எண்ணங்கள் இருந்தால், நல்ல அறிவு திறன் முதல் அனைத்தும் வரும் இது நம்மை 2047 இல் இந்தியா மற்ற நாடுகளுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்க வைக்கும்.நீங்கள் வெற்றி பெற்றால், மற்ற நபர்களின் வாழ்வில் சாதனைக்கு வித்திடும் வகையில் சிந்தைனை விதைக்கிரீர்கள் என அர்த்தம். நீங்கள் இந்த நாட்டை பெருமை பட செய்கிறீர்கள், அதே சமையம் நம் நாடு முன்னேற உந்து சக்தியாக இருக்கிறீர்கள் என அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து வீரர் வீராங்கனைகள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பவானி தேவி ( காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் பதக்கம் வென்றவர் ) எங்களை கவுரவித்து சிறப்பு செய்த ஆளுநருக்கு நன்றி . எனது திறனை மேம்படுத்தி, சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றேன். மார்ச் 2021 ஆம் ஆண்டு நான் ஆசிய அளவில் முன்னிலை வகித்தேன். அதே சமயம் வாள்வீச்சு போட்டியில் இந்தியாவில் இருந்து பெண்கள் கலந்து கொள்வதற்கு முன் உதாரணமாக நான் விளங்குவது மேலும் மகிழ்ச்சியை தருகிறது.

பின்பு அர்ஜுனா விருது பெற்ற வீராங்கனை ஸ்குவாஷ் ஜோஷ்னா சின்னப்பா பேசியதாவது, எனது கனவு இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது தான், அது என்னை எப்போதும் ஊக்குவிக்கிறது. ஆளுநர் இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது எங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் என்ற மாரியப்பன் தங்கவேலு பேசியதாவது, இதுபோன்ற ஊக்குவிப்புகள் மேன்மேலும் எங்களைப் மகிழ்ச்சிப்படுத்துகிறது. பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, அதில் தங்கம் வென்றது மிக்க மகிழ்ச்சி. ஒரு விளையாட்டு வீரர் என்பவர், நமக்கு கிடப்பதை வைத்து கொண்டு சாதிக்க வேண்டும். கிடைக்காத ஒன்றை எண்ணிக்கொண்டு சாதிக்கும் முயற்சியை விட்டு விட கூடாது. தமிழ்நாடு அரசு விளையாட்டு போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க பல்வேறு முயற்சிகள் மற்றும் உதவியை செய்து வருகிறார்கள். இன்னும் கிராமங்களில் இருந்து பல்வேறு வீரர் வீராங்கனைகள் இந்தியாவுக்காக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதிக்க வேண்டும் எனப் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.