இந்தியாவில் கடந்த 9 மாதத்தில் மட்டும் 146 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி தரவுகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை கிட்டத்தட்ட 146 புலிகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வளவு எண்ணிக்கையிலான புலிகள் இறப்பது கடந்த 11 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் அதிகமான புலிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 3,000 புலிகளுடன் இந்தியாவில் உள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரையிலான கடந்த 9 மாதத்தில் 24 புலி குட்டிகள் உள்பட 146 புலிகள் இறந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
மேலும் மாநில வாரியாகவும் புலிகள் இறப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பட்டியலில் மத்தியப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. புலிகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் அதன் இனப்பெருக்கத் திறன் நேரடியாகப் பாதிக்கப்படலாம் என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக புலிகள் இறப்பு விகிதம் :
மத்தியப் பிரதேசம் – 34
மகாராஷ்டிரா – 32
உத்தரகாண்ட் – 17,
அசாம் – 11,
கர்நாடகம் – 9,
ராஜஸ்தான் – 5
இவற்றைத் தவிர கடந்த 9 மாதங்களில் நாட்டிலுள்ள பல்வேறு புலிகள் காப்பகங்களில் 70 புலிகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன.
புலிகள் இறப்புக்கான காரணம் குறித்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. புலிகள் இறப்புக்கான காரணங்கள் இயற்கையாகவோ அல்லது இயற்கைக்கு மாறானதாகவோ இருக்கலாம். இயற்கைக்கு மாறான காரணங்களில் விபத்துகள் காரணமாக ஏற்படும் மரணங்கள், புலிகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களினால் ஏற்படும் இறப்புகள் ஆகியவை அடங்கும். இதில் வேட்டையாடுதல் என்பது தனி.







