மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளான, பாராலிம்பிக் கோலாகலமாக தொடங்கியது.
உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன.
இன்று தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறும் பாராலிம்பிக்கில் 163 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 537 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 54 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மொத்தம் 22 விளையாட்டுகளில் 539 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார். இவர்கள் மீது இந்த முறையும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. மேலும் உலக சாதனையாளர்கள் சந்தீப் சவுத்ரி, சுமித் ஆகியோரும் தடகள அணியில் இடம்பெற்றுள்ளனர்.
கொரோனா காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் தொடக்கவிழாவில் ஒவ்வொரு நாடுகளின் சார்பில் 11 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த், இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.










