20 ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய அமைச்சர் கைது

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவை அறைந்திருப்பேன் என கூறிய மத்திய அமைச்சரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘மக்கள் ஆசி யாத்திரையை’ பாஜக முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ராய்காட் மாவட்டத்தில் நடைபெற்ற…

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவை அறைந்திருப்பேன் என கூறிய மத்திய அமைச்சரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘மக்கள் ஆசி யாத்திரையை’ பாஜக முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ராய்காட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த யாத்திரையில் பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, “நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்கிற விவரம் கூட மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு தெரியவில்லை. சுதந்திர தின உரையின்போது, எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் என்பதை முதலமைச்சர் மறந்துவிட்டார். உரையின் பாதியில், தனது உதவியாளரிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.

இது அவமானமாக உள்ளது. சுதந்திர தின உரையின்போது அவருக்கு எத்தனையாவது ஆண்டை கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள உதவியை நாடி வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது நான் இருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்.” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜவை எதிர்த்து சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டம் பல இடங்களில் மோதலாக வெடித்தது. நாராயண் ரானேவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

புகாரைத் தொடர்ந்து நாசிக் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தன் மீதான கைது நடவடிக்கைக்கு தடைக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் ரத்னகிரியில் நாராயண் ரானே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் மத்திய அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இவரது கைதுக்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.