நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையில் கடந்த டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி தனியார் பள்ளியின் கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர்கள் இருவரும், பள்ளியின் சுவர் இடிந்து விழும் சம்பவம் நிகழ்ந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் பொறுப்பேற்றுள்ளனர் எனவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி மூடப்பட்டிருந்ததால், கட்டடத்தின் தன்மை குறித்து மனுதாரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். இதனால், சுவர் இடிந்து விழுந்த விபத்திற்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க இயலாது என தெரிவித்த நீதிபதி, பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








