சாதனைகளின் நாயகன் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் இன்று..!

24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை கட்டியாண்ட இந்திய கிரிக்கெட் அணியின் பிதாமகன்… லிட்டில் மாஸ்டர்… மாஸ்டர் பிளாஸ்டர் என்று போற்றப்படும் மாபெரும் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மகாராஷ்டிரா…

24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை கட்டியாண்ட இந்திய கிரிக்கெட் அணியின் பிதாமகன்… லிட்டில் மாஸ்டர்… மாஸ்டர் பிளாஸ்டர் என்று போற்றப்படும் மாபெரும் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த 1973 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி, சாதாரண ஒரு நடுத்தர குடும்பத்தில், ரமேஷ் என்பவருக்கு மகனாக பிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். சச்சினின் தந்தை ரமேஷ் மராத்தி மொழி நாவலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார் . மிகவும் சுட்டித்தனம் நிறைந்தவரான சச்சினுக்கு சிறுவயதிலேயே படிப்பின் மீது இருந்த நாட்டத்தை விட, டென்னிஸ் மற்றும் கிரிக்கெட்டின் மீதுதான் அதீத ஆர்வம் இருந்துள்ளது. சச்சினின் ஆர்வத்ததையும், கிரிக்கெட்டில் அவருக்கு இருந்த தனித்திறமையையும் கண்ட அவரது சகோதரர், சச்சினை மும்பையில் புகழ்பெற்ற பயிற்சியாளராக இருந்த அச்ரேகர் என்பவரிடம் சேர்த்து விட்டார்.

சச்சின் மும்பை கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடும் போது, அவரது விளையாட்டை பார்க்க ஆரம்பித்த பல பிரபல கிரிக்கெட் வீரர்களும், சச்சினின் விளையாட்டை கண்டு, தினமும் மைதானத்துக்கு வரத் தொடங்கினர். இதனால், அவரது பெயர் அனைவரின் மத்தியிலும் கவனம் பெற ஆரம்பித்தது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அனைவரின் கவனத்தையும் பெற்ற சச்சினுக்கு 14 வயதிலேயே ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்து தேர்வானார்.

1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது சச்சினுக்கு வயது 10. அவரும் அந்த ஆட்டத்தை வீட்டிலிருந்தபடியே பார்த்தார். அதன் பிறகு, தானும் ஒரு நாள் தாய்நாட்டுக்காக கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.

இந்த நேரம்தான், மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிக முக்கியமானவராக கருதப்பட்ட சுனில் கவாஸ்கர் 1987-ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியோடு ஓய்வு பெற்றார். சுனில் கவாஸ்கர் ஓய்வு பெற்றபோது சர்வதேச அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்க்கப்போகும் அடுத்த இந்திய வீரர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

சரியாக ஒரு வருடம் கழித்து 1988ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் தேதி குஜராத்துக்கு எதிரான முதல் தர கிரிக்கெட் போட்டியொன்றில் களமிறங்கினார் சச்சின். 16 வயது கூட முழுமையாக பூர்த்தியடையாத அந்த சிறுவன் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினான். முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த இந்தியர்களில் மிகவும் இளையவர் என்ற சாதனையும் சிறுவனான சச்சினுக்கு கிடைத்தது.

சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் படியே வெற்றிப்படியாக அமைந்ததால், தொடர்ந்து வெற்றி என்ற ஏணிப்படிகளில் ஏற ஆரம்பித்தார். இருந்தும் அதே வேளையில் இடையிடையே நிறைய சறுக்கல்களையும் சந்தித்தார். ஒவ்வொன்றையும் கடந்து சச்சின் இல்லாத கிரிக்கெட் அணியை நினைத்துக்கூட பார்க்கக் முடியாது எனும் அளவுக்கு அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக ஆரம்பித்தது.

சாதனைகளின் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், பேட்ஸ்மேனாக மட்டுமின்றி சிறந்த வேக பந்து வீச்சாளராகவும் ஆக விரும்பி, அதற்கான பயிற்சியை மேற்கொண்டு, இடது கையால் எழுதும் பழக்கமுள்ள சச்சின் வலது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை பந்துவீச்சாளராகவும், ஃபீல்டிங்கின் போதும் வலது கையால் பந்தை எறிபவராகவும் விளங்கினார்.

1992 தொடங்கி 2007 வரை எத்தனையோ உலக கோப்பை போட்டிகளில் விளையாடினார் சச்சின். ஆனால் ஒரு போட்டிகளில் கூட கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற வறுத்தம் சச்சினுக்கு இருந்தது. அதனை முறியடிக்கும் விதமாக மும்பையில்
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில், தல தோணி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகிறது. இந்திய அணி கோப்பையை வென்று சச்சினுக்கு காணிக்கையாக்கியது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து சச்சினை கவுரவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு மினியேச்சர்கள் வெளியிடப்பட்டது. அன்னை தெரசாவிற்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை பெற்றார்.

இதே போன்று 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர்,  463 போட்டிகளில் 452 இன்னிங்ஸ் விளையாடி 18426 ரன்கள் சேர்த்துள்ளார். இதுவரையில் சச்சின் அடித்த 100 சதங்கள் சாதனையை இதுவரையில் யாரும் முறியடிக்கவில்லை.

மிக இளம் வயதில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை சச்சின் டெண்டுல்கர் பெற்றார். 40 வயதில் பாரத ரத்னா பெற்ற ஒரே இந்தியர் மற்றும் விளையாட்டு வீரர் சச்சின் மட்டும் தான். தன்னுடன் 5 வயது மூத்தவரான அஞ்சலி என்பவரை திருமணம் செய்துகொண்ட சச்சின் டெண்டுல்கருக்கு, அர்ஜுன் டெண்டுல்கர் என்ற மகனும், சாரா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தந்தையை போலவே மிகச்சிறந்த பவுலராகவும் உள்ளார்.

கிரிக்கெட் இன்னும் பல சிறந்த வீரர்களை உருவாக்கலாம்… பலரின் சாதனைகள் முறியடிக்கப்படலாம்… ஆனால் சச்சின் டெண்டுல்கர் போன்று இன்னொரு வீரரை மட்டும் இனி இந்த கிரிக்கெட் உலகம் பார்க்க முடியாது என்பது மட்டும் உண்மை.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.