தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக வலம் வரும் சீயான் விக்ரமின் பிறந்த தினம் இன்று.
தமிழ் சினிமாவில் போராடி வெற்றி பெற்று, தன்னுடைய ஒவ்வொரு படத்திலும்
ரசிகர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை கொடுப்பதற்காக கடுமையாக உழைக்கும்
மகாக் கலைஞன் சீயான் விக்ரம் பிறந்த தினம் இன்று. அவர் குறித்த செய்தி தொகுப்பை
தற்போது பார்க்கலாம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பிற்காகவே
ஒருவர் மெனக்கிடுகிறார் எனில் அது நிச்சயம் விக்ரமாகத்தான் இருக்க
முடியும். படத்திற்கு படம் வித்தியாசமான தோற்றம், உடல்வாகு என தன்னையே
வருத்திக்கொண்டு நடிக்கும் ஒரு உன்னதமான கலைஞன் தான் விக்ரம்.
சேதுவில் தொடங்கி இன்று பொன்னியின் செல்வன் வரை ஏராளமான வெற்றிப்படங்கள். இத்தனை வெற்றிகள், சினிமா அங்கீகாரம், முகமறியா ரசிகர்களின் அன்பு என அனைத்து
அற்புதங்களும் ஒரே நாளில் நடிகர் விக்ரமுக்கு கிடைத்ததுவிட்டதா என்றால்
நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஹீரோவாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் கடந்த பிறகே விக்ரமுக்கு முதல் வெற்றி
கிடைத்தது. 1999ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் தான்
சீயான் விக்ரம் என்ற உன்னத கலைஞனை நமக்கு கொடுத்தது. இந்த வெற்றிக்கு பின்னால்
விடாமுயற்சி, தோல்வி, வலி என பலவற்றை நடிகர் விக்ரம் விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
சேது படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடித்த பிதாமகன், காசி, அந்நியன், ஐ
போன்ற பல திரைப்படங்கள் அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தான்
சொல்ல வேண்டும். வெற்றி, தோல்வி என்பதை தாண்டி சினிமாவிற்கு விக்ரம்
கொடுத்துள்ள அர்ப்பணிப்பை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது.
நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் விக்ரம் வேலை செய்துள்ளார். நடிகர் அஜித்தின் அறிமுகப் படமான அமரவாதியில் அவருக்குக் குரல் கொடுத்தவர் விக்ரம்தான். அஜித் மட்டுமல்லாமல் பிரபுதேவா, அப்பாஸ் போன்றவர்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறார் விக்ரம். நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக தன்மை கொண்டவராகவும் விக்ரம் திகழ்ந்து வருகிறார்.
தமிழ் சினிமா எத்தனையோ நடிகர்களை கொண்டாடி இருக்கிறது. ஆனால், ஒரு சிலர்
மட்டுமே, தமிழ் சினிமாவின் தரத்தை உலக அளவிற்கு கொண்டு செல்கின்றனர்.
அப்படிப்பட்ட கலைஞர்களுக்கு காலம் சிறந்த அங்கீகாரத்தையும் கொடுக்கிறது. அது
போன்ற பல்வேறு அங்கீகாரங்கள் விக்ரமும் கிடைக்க நாமும் வாழ்த்துவோம்.
-தினேஷ் உதய், நியூஸ் 7 தமிழ்







