தென்னாப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் அந்த அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்திய அணி சரிவை சந்தித்தால் தொடரை இழந்து விடும். இதனால் நெருக்கடிக்கு மத்தியில் களம் இறங்கும் இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

கடந்த முறை சரியான வியூகத்துடன் வீரர்கள் களமிறக்கப்படவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்த நிலையில், இந்த முறை இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக புதிய வியூகத்துடன் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்படுகிறார். மேலும், தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் களம் இறங்குவதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
-இரா.நம்பிராஜன்







