திமுகவின் மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிக்கும் கனிமொழிக்கு, துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகியுள்ளார். திமுகவின் 5 துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் விலகியுள்ள நிலையில், மகளிர் ஒருவர் துணைப் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்ற திமுகவின் சட்ட விதியின் காரணமாக அந்த பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான பரிசீலனையில் முதலாவதாக இருந்த கனிமொழிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பல நிர்வாகிகள் திமுக தலைமைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், திமுக பொதுக் குழு அக்டோபர் 9 ஆம் தேதி கூடும்போது துணைப் பொதுச் செயலாளராக கனிமொழியை அறிவிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து 2016இல் மறைந்த சற்குண பாண்டியன் வயது முதிர்வின் காரணமாக தனது பதவியை கனிமொழிக்கு அளிக்க விரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2015 முதல் திமுகவின் மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி, கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என பன்முகத்தன்மை கொண்டவராகவும், எளிதில் அணுகக் கூடியவராகவும் உள்ளார். மாநிலங்களவையில் தனது ஆணித்தரமான கருத்துகளை எடுத்துரைத்து முத்திரை பதித்த கனிமொழி, தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.








