நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது என்றும் எனவே ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
கொரோனா தொடர்பான அனைத்துப் பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். கொரோனா மூன்றாவது அலை எனக் கூறப்படும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.







