திருச்சி சமயபுரம் அம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கு இன்று காலை 6.45 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். ஆகமவிதிப்படி 12…

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கு இன்று காலை 6.45 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில்களில் குடமுழுக்கு நடத்த வேண்டும். ஆனால் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லாததால் ராஜகோபுரம் கட்டி முடித்தவுடன் குடமுழுக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிறப்பு யாகங்கள்

அதன்படி 7 நிலைகள் கொண்ட 103 அடி ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி சிறப்பாக முடிவடைந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக 3 கால சிறப்பு யாகங்கள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு மகாபூர்ணா ஹூதியும், தீபாராதனை, யாத்திரா தானம் நடைபெற்றதையடுத்து 4வது கால பூஜை நடந்தது. தொடர்ந்து 6.45 மணிக்கு 7 நிலைகள் கொண்ட கிழக்கு ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

ராஜகோபுரம்

சுமார் 2.5 கோடி செலவில் சுமார் 103 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராஜகோபுரத்தில் ஏழு கோபுர கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது. 4.5 அடி உயரம் கொண்ட கலசத்தில் நவதானியங்கள் நிரப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.

ராஜகோபுரத்தில் மொத்தம் 324 சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அம்மனின் பல்வேறு அவதாரங்கள்,தைப்பூசம் தினத்தன்று மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் சீர் கொடுக்கும் கண்கொள்ளா காட்சி, சித்திரை தேர் திருவிழாவின் போது திருவானைக் கோயில் அகிலாண்டேஸ்வரி கோயிலில் அபிஷேகம் மற்றும் நெய்வேத்திய பொருட்கள் வழங்கப்படும் நிகழ்வு, அம்மன் பக்தர்களுக்காக பிச்சை பட்டினி விரதம் இருக்கும் அரிய சிற்பம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் அம்மனுக்கு நடைபெறும் வைபவங்கள் குறித்த சிற்பங்கள் இடம்பெற்றிருப்பது மேலும் சிறப்பளிக்கிறது.

குழந்தை வரம் வேண்டி குழந்தைபேறு கிடைத்ததும் அம்மனுக்கு தம்பதியினர் தொட்டில் கட்டி நேர்த்திகடனை செலுத்தும் காட்சி, பக்தர்கள் விரதம் இருந்து அலகுகுத்தி அக்னி சட்டி ஏந்தி நடந்து வரும் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பது பக்தர்களின் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் முதல் முறையாக இந்த ராஜகோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதுறு குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

சமயபுரம் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் முழுவதும் மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்டு தீபஒளியில் மிளிர்ந்தது. கும்பாபிஷேகத்தை காண நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து குவிய தொடங்கினர். திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்தனர்.

திருச்சி நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் காட்சியளித்தது. லட்சகணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்பதால் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.