டி.என்.பி.எல் கிரிக்கெட்: திருச்சி கிராண்ட் சோழா அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!

TNPL கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 16 ரன் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.   8வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் சேலத்தில் தொடங்கியது.  இந்த…

TNPL கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 16 ரன் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  

8வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் சேலத்தில் தொடங்கியது.  இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.  இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.  அந்த வகையில், சேலத்தில் நேற்று மதியம் 3.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷிவம் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் அஸ்வின் 5 ரன்னிலும் அடுத்து வந்த விமல் குமார் 9 ரன்னிலும் வெளியேறினர்.  இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங்குடன்,  பாபா இந்திரஜித் ஜோடி சேர்ந்தார்.

இதில் சிறப்பாக ஆடிய ஷிவம் சிங் அரைசதம் அடித்த நிலையில் 78 ரன்னிலும், இந்திரஜித் 33 ரன்னிலும் அவுட் ஆகினர். இவர்களை அடுத்து களமிறங்கிய தினேஷ் ராஜ் 1 ரன்னிலும், சரத் குமார் ரன் ஏதும் எடுக்காமலும், கிஷோர் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.  இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 8 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்தது.  திருச்சி தரப்பில் ஈஸ்வரன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.

திருச்சி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வசிம் அகமது 6 ரன்னிலும்,  அர்ஜூன் மூர்த்தி 18 ரன்னிலும் வெளியேறினர்.  இதையடுத்து இறங்கிய தமிழ் திலீபன் 5 ரன்னிலும், ஷ்யாம் சுந்தர் 23 ரன்னிலும், ஜாபர் ஜமால் 13 ரன்னிலும், சஞ்சய் யாதவ் 24 ரன்னிலும், ஆண்டனி தாஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  இறுதியில் திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் 16 ரன் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.