முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, ரூ. 1,500 : சரியா? தவறா?


எழுத்து - சி.பிரபாகரன்

கட்டுரையாளர்

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம்” என பல்வேறு திட்டங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறி வருகின்றனர். இதில் சமீபத்தில் பெரும் பேசுபொருளாக மாறி வருவது குடும்பத்தலைவிகளுக்கான மாத உதவித்தொகை திட்டம்.

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதா மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பல நாட்களுக்கு முன்னரே கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அது அப்போது வரவேற்றும் ,எதிர்த்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 7ஆம் தேதி திமுகவின் “விடியலுக்கான முழக்கம்” நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தின் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதாமாதம் ரூ.1000 உரிமைத்தொகையாக வழங்கப்படும்” என்று அறிவித்தார். திமுகவால் இது அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இவ்விரு அறிவிப்புகளும் வீட்டுப்பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். எனினும், “குடும்பத்தலைவிகளுக்கு மாத ஊக்கத்தொகை அளிப்பதற்கான தேவை என்ன?” என்பதே இங்கு பலரது கேள்வியாகவும் இருந்தது. வேலையில்லா பட்டதாரி குடும்ப தலைவிகளுக்கும், கணவர் இன்றி குழந்தைகளுடன் தனியே வசிக்கும் பெண்களுக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கும் இந்த மாதத் தொகை உதவியாக இருக்கும் என பலதரப்பட்ட பெண்களும் கூறுகின்றனர். கொரோனா காலத்தில் தமிழக அரசினால் மாதந்தோறும் வழங்கப்பட்ட 1000ரூபாய் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் மேம்படுத்தவில்லை என்றாலும் அது அவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது என்பது நாம் அறிந்ததே. அது போன்று இந்த ஊக்கத்தொகையும் தங்களின் குடும்பத்திற்கு ஒரு குறைந்தப்பட்ச ஆதரவாக அமையும் என்றே பெண்கள் நம்புகின்றனர்.

இவ்வாறாக ஒருபுறம் ஆதரவு குரல்கள் கேட்டுக்கொண்டிருக்க, மறுபுறம் அதற்கு எதிர்ப்பு அலைகளும் கிளம்பியுள்ளன. அதுவும் அறிவிப்பு விடுத்த திராவிட கட்சிகள் சார்ந்த திராவிட இயக்கங்களில் இருக்கும் உறுப்பினர்களே எதிர்க்குரல் எழுப்புகின்றனர். “ஆண்களுக்கு அடிமையாக வீட்டு அடுப்பங்கரையிலேயே அடங்கிக்கிடந்த பெண்களை வெளிகொண்டுவந்து அவர்கள் இன்று ஆண்களுக்கு சமமான உத்தியோகத்திலும் சம்பளமும் பெரும் நிலைமையை உருவாக்கியது பெரியாரிய திராவிட சிந்தனைகளை கொண்ட திராவிட கட்சிகள் இயக்கங்களின் போராட்டங்களால் தான். இந்த நிலைமை இன்றளவும் முழுமையாக மாறாத நிலையில், குடும்பத்தலைவிகளுக்கான இதுபோன்ற ஊக்கத்தொகைகள் மேலும் மேலும் பெண்களை வீட்டு சமையலறையிலேயே அடிமையாக்கிவிடும்” என்பதே அவர்களது ஐயமாகவும் இருக்கிறது.

ஊக்கத்தொகைகள் என்பது பெருமளவு உலகளவில் பிரசித்திப்பெற்ற ஒன்றே. ஸ்விட்சர்லாந்து, ஃபின்லாந்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளன. ஆனால், அது அவர்கள் வேலைக்கு செல்லும் நாள் வரையில் மட்டுமே. ஃபிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் Working Family Payment என்ற ஒரு திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, மக்களின் சராசரி வார குடும்ப வருமானத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கு பொருந்தும் வருமான வரம்புக்கும் இடையிலான வித்தியாசத்தின் 60% தொகையை அரசு அவர்களுக்கு உதவித்தொகையாக அளிக்கும். மேலும் , universal basic income, உலகளாவிய அடிப்படை வருமானம் என்ற ஒன்றினை மக்களுக்காக அறிமுகப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் தயாராகிக்கொண்டு வருகின்றன. இது போன்று மக்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் பல்வேறு திட்டங்கள் உலகெங்கிலும் அரங்கேறி வருகின்றன.


எனினும், “இது போன்ற ஊக்கத்தொகை அளிக்காமல் அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளியுங்கள், அல்லது மக்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள்” என்ற எண்ணமே பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து ஃபின்லாந்து அரசால் 2000 வேலையில்லா இளைஞர்களைக்கொண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
ஊக்கத்தொகை குறைந்ததாக அல்லது தற்காலிகமாக இருந்தாலும் கூட, அதிகமான வேலையை ஏற்றுக்கொள்ள மக்களை வழிநடத்துகிறதா என்பதை அரசாங்கம் பார்க்க விரும்பியது.


அந்த சோதனை ஒரு தோல்வியாகவே அமைந்தது. “இலவச பணத்தைப் பெறுவது, மக்கள் வேலைக்கு வருவதற்கான வாய்ப்பை பாதிக்கவில்லை.உழைப்பு குறையவில்லை என்றாலும் வேலையில் சேரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை” என்ற முடிவுக்கு வந்தது அந்த ஆய்வு. ஆனால் அடிப்படை வருமானம் என்ன செய்தது என்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. அது பெறுநர்களை மகிழ்ச்சியாகவும், மன அழுத்தத்தை குறைய செய்ததை உணரச்செய்ததாகவும் ஃபின்லாந்தின் சமூக காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் ஒல்லி கங்காஸ் நடத்திய ஆய்வு கூறுகிறது.1970 களில், கனடாவில் “அடிப்படை வருமானத் திட்டம்” மக்கள் நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கும் விகிதத்தை 8.5 சதவீதமாக குறைந்ததும் வரலாறு .

ஆக, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அளிக்க இருக்கும் ஊக்கத்தொகையால் குடும்பத்தலைவிகளின் மன அழுத்தம் குறைந்தாலும் அவர்களின் சுய மேம்பாட்டிற்கு எந்த அளவிற்கு உதவும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையே “நீங்கள் 100ரூபாய் பெட்ரோல் விலையை பாதியாக 50 ரூபாயாக குறைத்தால், மீதி ஆகும் 50 ரூபாயே மாதம் எங்களுக்கு 1500 ரூபாயாக உதவும்” என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றனர். இவை அனைத்தையும் “நமக்கெல்லாம் ஊக்கத்தொகை எப்போது கிடைக்குமோ?” என மன வருத்தத்துடன் கடந்து செல்கின்றனர் கணவன்மார்கள்.

  • சி.பிரபாகரன்

Advertisement:

Related posts

ஜெயலலிதா பாணியில் பரப்புரை செய்த குஷ்பு!

Ezhilarasan

சர்வதேச விமானங்கள் ரத்து!

Ezhilarasan

கருப்பு பூஞ்சைக்கு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

Karthick