திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தினமும் என்னைப் பற்றி நினைக்கவில்லை என்றால் தூக்கம் வராது என முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்.
கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவனுக்கு ஆதரவாக பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,“ திமுக தலைவர் தேர்தல் பரப்புரைக்காக போகும் இடமெல்லாம் பொய்யாகப் பேசி வருகிறார். என்னைப் பற்றி பேசுவதே அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. என்னை நினைக்கவில்லை என்றால் ஸ்டாலினுக்கு தூக்கம் வராத.
ஸ்டாலின் போகிற இடமெல்லாம் அவதூறு செய்தி, பொய் செய்தியைப் பேசி மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். ஆனால் அவர் முயற்சி பலனளிக்கவில்லை. ஏனென்றால் மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்கள் அதிமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறவேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள்.
ஒரத்தாடு தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் இன்று ஈடுபட்டுள்ளார். அங்கு பேசிய ஸ்டாலின் காவிரி நதி நீரைத் தமிழகத்துக்கு பெற்று தந்தது அவர்தான் என கூறியுள்ளார்.50 ஆண்டுக்கால காவிரி நதிநீர் பிரச்சனையில் தீர்வு கண்டது அதிமுக அரசுதான். அதனை மத்திய அரசிதழில் வெளியிட்டது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள்தான். அதிமுக அரசின் சட்டப்போராட்டத்தில் தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. கர்நாடக அரசு கபினியில் அணை கட்டியபோது தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஆட்சி செய்தது. அப்போது அவர் அதனை தடுத்து இருந்தால் இந்த தண்ணீர் பிரச்சினை வந்திருக்காது. விவசாயிகள் மீது திமுகவுக்கு எந்த அக்கறையும் கிடையாது. விஞ்ஞான உலகத்தில் பொய் பேசினால் செல்லாது என்பது திமுக தலைவர் ஸ்டாலின் புரிந்துகொள்ளவேண்டும்” என்றார்.







