முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரடங்கால் குறைந்த காற்று மாசு!

தமிழகத்தில் முழு ஊரடங்கின் பலனாக கொரோனா பாதிப்பு குறைந்தது மட்டுமல்லாது, நாம் சுவாசிக்கும் காற்றும் தூய்மையடைந்துள்ளது.

நாட்டில் சென்னை மாநகரம்தான் அதிக வாகன எண்ணிக்கை கொண்ட 2-வது இடமாகும். கடந்த ஆண்டின் நிலவரப்படி சென்னையில் மட்டும் 55 லட்சத்துக்கும் மேலான வாகனங்கள் உள்ளன. அதேபோல் கடந்த 15 ஆண்டுகளில் சென்னை நகரில் மட்டும் 300 % வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

அதிக வாகன நெரிசலாக காணப்படும் சென்னையில் சுத்தமான காற்றை சுவாசிப்பது என்பதே அரிதான விஷயமாகும். ஆனால் கடந்த சில நாட்களாக ஊரடங்கின் காரணமாக சென்னையில் காற்றின் மாசு குறைந்துள்ளது.

காற்று மாசின் அளவு

மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள தர நிர்ணய கட்டுப்பாடுகளின்படி நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவு 0-50 (Air Quality Index) குறைவாக இருந்தால் தூய காற்று என வரையறுக்கப்பட்டுள்ளது. காற்றில் 50 முதல் 100 வரை (Air Quality Index) இருந்தால் அந்த காற்று சுவாசிக்கத்தக்கது. 101 முதல் 200 (Air Quality Index) காற்றில் நுண்துகள்கள் பரவியிருந்தால் குறைந்த அளவு மாசு இருப்பதாக கருதலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவு 201 முதல் 300-ஆக இருந்தால் அது மாசடைந்த காற்றாகும். நுண்துகள்களின் அளவு 301 முதல் 400 பிஎம் வரை இருந்தால் சுவாசிக்கக் கூடாத மோசமான காற்று என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரையரை செய்துள்ளது. காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவு 401 முதல் 500 பிஎம் வரை இருந்தால், காற்று மாசு அபாயகட்டத்தை எட்டிவிட்டது எனவும், இந்த அளவு மாசு உள்ள காற்றை சுவாசிக்க கூடாது எனவும் மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

இப்படி, சுவாசிக்கும் காற்றுக்கான தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும் நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

சென்னை நகர் காற்று

சென்னை நகரில் சராசரியாக 150 பிஎம் அளவுக்கு காற்றில் நுண் துகள்கள் இருக்கும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா பரவலால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, சென்னையில் காற்று மாசின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

வழக்கத்தைவிட 55 சதவீதம் அளவுக்கு காற்றில் உள்ள நுண் துகள்களின் அளவு குறைந்திருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையின் முக்கிய நகர் பகுதியான வேளச்சேரியில் காற்றில் உள்ள நுண் துகள்களின் அளவு 67 பிஎம்-ஆகவும்
துறைமுகத்தை ஒட்டிய பகுதியான ராயபுரத்தில் 62 பிஎம் அளவுக்கும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரும்பாக்கம் பகுதியில் 63 பிஎம் அளவுக்கு காற்று மாசு குறைந்திருப்பதாகவும், ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெருங்குடி பகுதியில் 64 பிஎம் அளவுக்கு நுண் துகள்களின் அளவு குறைந்து, காற்று தூய்மையாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிக அளவாக உள்ள ஆலந்தூர் பகுதியில் கூட 80 பிஎம் அளவுக்கு மட்டுமே காற்றில் மாசு கலந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாசடைந்த காற்றால் லட்சம் பேர் உயிரிழப்பு

20 நாள் ஊரடங்கில் இயற்கை தன்னை புனரமைத்துக் கொண்டு, தூய்மையான காற்றை மக்களுக்கு வழங்கி, ஒவ்வொருவரின் நுரையீரைலையும் புத்துணர்வு அடையச் செய்திருக்கிறது.

கொரோனாவைப் பற்றி நாள்தோறும் புதிய, புதிய செய்திகளை தேடித் தேடி தெரிந்துகொள்ளும் நாம், தூய்மையான காற்றின் முக்கியத்துவத்தையும் உணர வேண்டிய தருணம் இது.

ஏனென்றால் கொரோனாவால் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் 3 லட்சம் பேர். ஆனால், மாசடைந்த காற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்…

கொரோனாவை தடுக்க எங்கு சென்றாலும், முக்கவசம் அணிந்து செல்வது போல, மாசடைந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க, எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க, காற்று மாசு குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட வேண்டியது அவசியம்.

-அழகுவேல் பாண்டியன், நியூஸ் 7 தமிழ்

Advertisement:

Related posts

ரேஷன் கடைகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை!

தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பா?

Saravana Kumar

இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று!

Hamsa