தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்ற எம்.எல்.ஏ ராஜா: விடுபட்ட வார்த்தையால் மீண்டும் பதவியேற்பு!

கேரளாவின் தேவிகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா மீண்டும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவுள்ளார். கேரள சட்டமன்றத்தில் கடந்த 25ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பிடிஏ…


கேரளாவின் தேவிகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா மீண்டும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவுள்ளார்.


கேரள சட்டமன்றத்தில் கடந்த 25ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பிடிஏ ரஹீம் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவர்களில் 43 எம்.எல்.ஏ.க்கள் கடவுளின் பெயராலும், 13 பேர் அல்லாவின் பெயராலும், 80 உறுப்பினர்கள் உளமாற எனக்கூறியும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தேவிகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.ராஜா தமிழில் உறுதிமொழி ஏற்றார். ஆனால், அவர் பதவியேற்கும்போது சட்டத் துறை மொழிபெயர்த்த வார்த்தைகளில் ஒன்றை விட்டுவிட்டார். அதாவது, கடவுளின் பெயரால் அல்லது உளமாற எனக் கூறி பதவி ஏற்பதுதான் வழக்கம். ஆனால், ராஜா பதவியேற்கும்போது உளமாற என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் வெறும் உறுதி கூறுகிறேன் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தினார்.

பதவியேற்பின்போது நடந்த இந்த பிழை காரணமாக மீண்டும் ஒருமுறை பதவியேற்க வேண்டிய நிலை ராஜாவுக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் சபாநாயகர் ராஜேஷ் முன்னிலையில் மீண்டும் பதவியேற்க இருக்கிறார். அவருடன் ஏற்கனவே பதவியேற்காத அமைச்சர் அப்தூர்ரகுமான் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்கின்றனர்.

தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜா, 7848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.