பருவ மழையை சந்திக்க சென்னை தயாரா?

சென்னையில் பருவ மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படாத வண்ணம் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னைவாசிகளுக்கு வடகிழக்கு பருவமழை என்றாலே ஒருவித அச்ச உணர்வு ஆட்கொள்ளும். மழை வெள்ளத்தால் சென்னை மிதந்த…

சென்னையில் பருவ மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படாத வண்ணம் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னைவாசிகளுக்கு வடகிழக்கு பருவமழை என்றாலே ஒருவித அச்ச உணர்வு ஆட்கொள்ளும். மழை வெள்ளத்தால் சென்னை மிதந்த காட்சிகள் நினைவில் வந்து போகும். அந்த அளவிற்கு பருவ மழையின் போது சென்னை மாநகரின் முக்கிய பகுதிகள் எல்லாமே வெள்ளக் காடாக காட்சியளித்தன.

மழை நீர் வடிகால் வசதி இல்லாதது, கழிவு நீர் கால்வாய்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர் வாராதது போன்ற காரணங்களால் வெள்ளத்தில் மிதந்தது சென்னை. குறிப்பாக முடிச்சூர், வேளச்சேரி போன்ற பகுதிகள் மழை காலத்தில் தண்ணீரில் மூழ்கி மக்களை பாடாய்ப்படுத்தின.

இப்படி மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் மீண்டும் பாதிக்காத வகையில் தற்போதைய திமுக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மெகா தூர்வாரும் பணியை கையில் எடுத்துள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்கள் துரித கதியில் தூர்வாரப்படுகின்றன. மழை நீர் தேங்கக் கூடிய பகுதிகளான 801 தெருக்களை தேர்வு செய்து கழிவு நீர் கால்வாய்களை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதிக திறன் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தி தூர்வாரும் பணி நடைபெறுகிறது. கடந்த 21ஆம் தேதி தொடங்கி வரும் 30ஆம் தேதிக்குள் என பத்து நாட்களுக்குள் தூர் வாரும் பணியை முடிக்க குடிநீர் வடிகால் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.