சென்னை நந்தனத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை நந்தனம் அரசு கல்லூரி வளாகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த 13 லட்சத்து 41 ஆயிரத்து 494 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 2 லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்களுக்கான உணவு பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 444 பேர் பயன்பெறுகின்றனர். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் மற்றும் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.







