தமிழகத்திற்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
நாடெங்கிலும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக உருவெடுத்து வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 7,987 பேரில் கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவானது. மொத்த பாதிப்பு 9,62,935 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 41,72, 963 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.







