“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறைக்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்க, அத்துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ”உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டத்துக்காக, ஆட்சியர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் மற்றும் மின் மாவட்ட மேலாளர் ஆகியோரை உள்ளடக்கி, ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் அலுவலர்கள் தேவைப்படும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் சேர்த்துக் கொள்ளலாம். ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெறும் அதிகாரிகளின் பெயர், பதவி, உள்ளிட்ட விவரங்களை, utm tamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.
மாவட்ட வாரியாக அந்தந்த அலுவலகத்தில் பெறப்படும் மனுக்களுக்கு, அந்தந்த அலுவலர்களே பொறுப்பு என அவர் கூறியுள்ளார்.
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களில், இதுவரை 549 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







