திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
திருப்பூர் மாநகரப் பகுதிகளில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து மாநகர எல்கைக்குட்பட்ட தினசரி மார்க்கெட்,பழ குடோன் வீதி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 4 குடோன்களில் சுமார் இரண்டு டன் மதிப்பிலான மாம்பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் கெட்டுப் போன மாம்பழங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை மாவட்ட அலுவலர் முன்னிலையில் அழித்தனர்.மேலும் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க கேட்டு அக்கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
—வேந்தன்







