சென்னையில் இருந்து திருமலைக்கு திருப்பதி திருக்குடை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
திருப்பதி திருமலையில் ஆண்டுதோறும் பிரம்மோற்ஸவத்தின் போது, ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் மங்கலப் பொருட்களில் 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகளும் உண்டு. இந்த திருக்குடைகள் கடந்த 250 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாட்டில் இருந்து பாரம்பரியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இந்து தர்மார்த்த சமிதி சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு திருமலையில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடைப் பகுதியில் உள்ள, சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கியது. திருக்குடை ஊர்வலத்தை ரத்னகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள், இந்து தர்மார்த்த சமிதி நிர்வாக அறங்காவலர் வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் கொடியடைத்து தொடங்கி வைத்தனர்.
வரும் 21ம் தேதி திருக்குடைகள் திருமலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.







