இந்தியா நடத்தும் உலகக் கோப்பை இன்னும் 19 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், டிராபியானது தற்போது சென்னை வந்துள்ளது. அந்த டிராபியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு ஐசிசி வெளியிட்டது. உலகக் கோப்பை தொடருக்கு சுமார் 40 நாட்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. தொடக்க போட்டியில் அக்டோபர் 5-ம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
உலகக் கோப்பை டிராபியானது கடந்த ஜூன் 27-ம் தேதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அன்று முதல் சில மாதங்கள், இந்த டிராபியானது உலகம் முழுவதும் குவைத், பஹ்ரைன், மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா என்று 18 நாடுகள் சென்று கடைசியாக இந்தியாவிற்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/mkstalin/status/1702926341765800255
இந்நிலையில் கிரிக்கெட் உலகக் கோப்பை, டிராபியானது சுற்றுப்பயணத்தின் 11வது கட்டத்தின் ஒரு பகுதியாக தென் மாநிலமான சென்னையை அடைந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிறப்பு விழாவில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து, இந்த டிராபியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.







