சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மதியம் 3 மணி அளவில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழையானது கொட்டி தீர்த்தது. அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, கிண்டி,காமராஜர் சாலை, அண்ணா சாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், நுங்கம்பாக்கத்தில் கனமழை பொழிந்தது
புறநகர் பகுதிகளான சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் போன்ற பகுதிகளிலும், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், போரூர், பூந்தமல்லி, மதுரவாயல், மாதவரம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது
இதனால் பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் கடும் இன்னலை எதிர்கொண்டனர். தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பயணித்தனர்.
இதனிடையே 19 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரு தினங்களுக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







