#Tirunelveli | மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு | நிர்வாக அமைப்பை ஊழல் கெடுத்துவிட்டதாக நீதிபதி வருத்தம்!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு தனியார் நிறுவன நிர்வாகி லஞ்சம் தர முயன்ற வழக்கை தனிப்படை அமைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை தென் மண்டல எஸ்.பி., க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம்…

#Tirunelveli | The case of bribery to the Corporation Commissioner - Judge regrets that corruption has spoiled the state administration system!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு தனியார் நிறுவன நிர்வாகி லஞ்சம் தர முயன்ற வழக்கை தனிப்படை அமைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை தென் மண்டல எஸ்.பி., க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் அசோக்குமார். இவர், திருநெல்வேலியில் அரியநாயகபுரம் குடிநீர் திட்டப் பணியை மேற்கொள்ள குடிநீர் வடிகால் வாரியத்திட்ட ஒப்பந்தப் பணி எடுத்திருந்தார். இந்த திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணி திருநெல்வேலி மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது.

இதனிடையே, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரை அவரது அலுவலகத்தில் அசோக்குமார் சந்தித்துள்ளார். அப்போது, பகுதியளவு பணி முடிக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையரிடம் அசோக்குமார் தெரிவித்துள்ளார். அதற்கு பணியை சரிபார்த்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில்,​ மாநகராட்சி ஆணையருக்கு பின்னால் ஒரு கருப்பு பையை அசோக்குமார் வைத்துள்ளார். அதை சரிபார்த்தபோது, அசோக்குமார், இதுவரை மேற்கொண்ட, இனி செய்ய வேண்டிய பணிக்கான பணம் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாநகராட்சி ஆணையர் அலுவலக ஊழியர்களிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். போலீசார் வரும்வரை அங்கேயே இருக்கும்படி கூறியும் அசோக்குமார் அந்த இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். அவர் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக மாநகராட்சி ஆணையர் திருநெல்வேலி ஜங்ஷன் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில், அசோக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “அசோக்குமார் மாநகராட்சி ஆணையரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். லஞ்சம் கொடுக்கவில்லை” என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மாநிலத்தின் நிர்வாக அமைப்பையே ஊழல் கெடுத்துவிட்டது. ஊழல் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டும், அவை ஒழிக்கப்படாமல், பொதுவான விஷயமாக மாறிவிட்டது. இந்த திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படாவிட்டால், திருநெல்வேலி நகரவாசிகள் அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மனுதாரர் ரூ.230 கோடிக்கு ஒப்பந்தப் பணியை மேற்கொண்டுள்ளார்.

தற்போதைய ஆணையர் சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற தருணத்தில் மனுதாரர் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். இத்திட்டப் பணி மனுதாரருக்கு எப்படி கிடைத்தது. அவர் எப்படி திட்டத்தை செயல்படுத்தினார் என்பது தெரியவில்லை. போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை தென் மண்டல எஸ்.பி., தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டும்” என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.