திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக விளங்கி வருவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலாகும். கடலுக்கு மிக அருகில் கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் இக்கோயிலில் சமீபத்தில் தைப்பூசம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பின்னர் 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதற்குப் பிறகு 8.30 மணிக்கு மூலவர், சண்முகப் பெருமான், தெய்வானை, வள்ளி மற்றும் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வருஷாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சி கால பூஜை அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த தை உத்திர வருஷாபிஷேக நிகழ்ச்சிக்கு கடந்த ஆண்டு கொரானோ பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்துள்ளனர். அங்கு நடைபெற்று வரும் சிறப்பு பூஜைகளில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் திருச்செந்தூர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்களின் வருகையை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
- பி. ஜேம்ஸ் லிசா









