ஈரோடு கிழக்கு தொகுதியில் மகனைவிட தந்தைக்கு 7 மடங்கு பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தனது மகன் திருமகன் ஈவெராவின் திடீர் மரணத்தால் மீளாத்துயரில் இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனை முழுமையாக மக்கள் பணிக்கு திருப்பி, அதுதான் அவருக்கு உண்மையான ஆறுதலாக இருக்கும் எனக் சுட்டிக்காட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒரு காலத்தில் தனது தந்தை கருணாநிதிக்கு போட்டியாக திமுகவில் விளங்கியவராக கருதப்பட்ட ஈவிகே சம்பத்தின் மகனுக்குத்தான் ஈரோடு கிழக்கில் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ந்தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து அவர் எம்.எல்.ஏவாக பணியாற்றிவந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஆட்சிக்கு வந்த பின்னர் சந்திக்கும் முதல் இடைத் தேர்தல் என்பதால் பலத்தை நிரூபிக்க திமுகவே நேரடியாக களம் இறங்க வேண்டிய அவசியமிருந்தும், அதைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் தொகுதியை விட்டுக்கொடுத்தார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அடுத்து இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யார் களம் இறங்கப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்தபோது, ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்திலிருந்து ஒருவர் போட்டியிடலாம் என கருதப்பட்டதேதவிர ஈவிகேஎஸ் இளங்கோவனே களம் இறங்குவார் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், தமது இளைய மகனுக்கு வாய்ப்புகொடுக்க வேண்டும் என்றுதான் காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியானது. மகனை இழந்து வாடும் இளங்கோவன் தனது கவனத்தை முழுமையாக மக்கள் பணிகளில் செலுத்துவதுதான் அவருக்கு ஆறுதலாக இருக்கும், அவரை புத்திர சோகத்திலிருந்து மீட்டு கொண்டு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது முடிவை மாற்றிக்கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் இறங்கினார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மிகவும் நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கு ஊற்சாகமூட்டும் வகையில் காங்கிரசுக்கும், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் மிகப்பெரும் வெற்றியை ஈரோடு கிழக்கு தொகுதியில் பெற்றுக்கொடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர் பெற்றுக்கொடுத்த இந்த வெற்றி ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பல்வேறு விதங்களில் பெருமை சேர்த்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றிகளில் ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவைவிட 66,233 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை காங்கிரசுக்கு 64.58 சதவீத வாக்குகளும், அதிமுகவிற்கு 25.75 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. இரண்டுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் 38.83% ஆகும். கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது வாக்கு சதவீத வித்தியாசம் 5.86% ஆகவே இருந்தது. கடந்த தேர்தலைவிட கிட்டதட்ட 7 மடங்கு பெரிய வெற்றியை ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பெற்றுத் தந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2004ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அடுத்துவந்த 2009, 2014, 2019 ஆகிய மூன்று மக்களவை தேர்தலிலும் அடுத்தடுத்து தோல்வியையேத் தழுவினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களில் வென்றது. ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்ட தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே திமுக கூட்டணி தோல்வியை தழுவியது. இது அவருக்கு பெரும் மனக்குறையாகவும், உறுத்தலாகவும் இருந்திருக்கும். அந்த மனக்குறையை போக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார். மேலும் கடந்த 2017ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு அக்கட்சியிலும், அரசியலிலும் அவர் சற்று ஒதுங்கியே இருப்பதாக தோற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புத்துணர்வோடு அவரை அரசியலிலும், காங்கிரசிலும் பயணிக்க வைத்திருக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி.
சம்பந்த் மைந்தனுக்கு கருணாநிதியின் மைந்தன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன் எனக் கூறி வீதிவீதியாக சென்று பரப்புரை மேற்கொண்டு ஈவிகேஎஸ் இளங்கோவனை பெற்றி பெறச் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன் இடையிலான நட்பினை தற்கால அரசியல் பேசிக்கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் மு.க.ஸ்டாலின் தந்தை கருணாநிதிக்கும், ஈவிகேஎஸ் இளங்கோவனின் தந்தை ஈவிகே சம்பத்திற்கும் திமுகவிற்குள் இருந்தாக கூறப்பட்ட மோதல் போக்கு அன்றைய காலகட்ட அரசியலில் பரபரப்பான பேசு பொருளாக இருந்தது.
பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகனான ஈவிகே சம்பத், 1949ம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து விலகி அண்ணா திமுகவை தொடங்கியபோது அவருடன் இணைந்து திமுகவில் பயணமானார். திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக வர்ணிக்கப்பட்டவர் ஈவிகேஎஸ் சம்பத். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், சம்பத்தும் அண்ணாவின் இரு கண்களாக இருந்து திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள். ஆனால் திமுகவில் கருணாநிதியின் பயணம் அவர் ஆயுள் உள்ளவரை நீடித்தது. அதே நேரம் ஈவிகே சம்பத் 12 ஆண்டுகளிலேயே திமுகவிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். திமுக வரலாற்றில் ஏற்பட்ட முதல் பிளவு இதுதான். இந்த பிளவிற்கு திராவிட நாடு கொள்கையில் ஈவிகே சம்பத்திற்கு ஏற்பட்ட முரண்பாடு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், கருணாநிதி ஆதரவாளர்களுக்கும், ஈவிகே சம்பத் ஆதரவாளர்களுக்கும் திமுகவில் இருந்த கருத்துவேறுபாடும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
திரைத்துரையைச் சேர்ந்த எம்.ஜி.ஆர், கருணாநிதிக்கு திமுகவில் அண்ணாத்துரை கொடுத்த முக்கியத்துவம் சம்பத்திற்கு பிடிக்கவில்லை என்றும், அதே நேரம் அண்ணாவையே விமர்சிக்கும் அளவிற்கு தடலடியாக கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் காட்டமாக சம்பத் பேசியது கருணாநிதிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. குறிப்பாக 1959ம் ஆண்டு புதுக்கோட்டையிலும், சிதம்பரத்திலும் நடைபெற்ற திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் சம்பத் பேசிய பேச்சுக்கள், கருணாநிதிக்கும், சம்பத்துக்கும் இடையே கருத்துவேறுபாடுகளை அதிகரித்தன. 1959ம் ஆண்டு சிதம்பரம் பொதுக்குழுக் கூட்டத்தில் “அறிஞர் அண்ணா என்றும், அண்ணா என்றும் அழைத்துவந்த நான், இனி திருவாளர் அண்ணாத்துரை என்றே அழைக்கப்போகிறேன்’ என ஈவிகே சம்பத் பேசியது பொதுக்குழு உறுப்பினர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
மேலும் அண்ணா அப்போது எம்.பி.யாக இருந்த நிலையில் சம்பத் திமுக சட்டவிதிகளில் கொண்டு வந்த திருத்தம் ஒன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் இனி கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று சம்பத் கொண்டுவந்த திருத்தத்திற்கு கருணாநிதியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி படிப்படியாக கருணாநிதிக்கும், ஈவிகே சம்பத்திற்கும் இடையே கருத்துவேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில், 1961ம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி தமிழ் தேசிய கட்சி என்கிற புதிய கட்சியை தொடங்கினார் சம்பத். அப்போது கவிஞர் கண்ணதாசன், சிவாஜிகணேசன், பழநெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் அந்த கட்சியில் இணைந்தனர். 1957ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வென்று டெல்லி சென்ற பிறகு, திராவிட கொள்கைகளிலும், சித்தாந்தங்களிலும் சம்பத்திற்கு ஈடுபாடு குறைந்ததே அவர் திமுகவை விட்டு பிரிந்ததற்கு காரணம் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. 1962 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கட்சி படு தோல்வியை அடைந்ததையடுத்து, 1964ம் ஆண்டு தனது கட்சியை காங்கிரசில் இணைத்தார் ஈவிகே சம்பத்.
காலம் அரசியலில் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் செய்துவிடும் என்பதற்கு ஏற்ப ஒரு காலத்தில் ஈவிகே சம்பத்துக்கும், கருணாநிதிக்கும் இடையே திமுகவிற்குள் இருந்த மோதலை பற்றி பேசிக் கொண்டிருந்த தமிழக அரசியல், தற்போது ஈவிகே சம்பத் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெற்றுக்கொடுத்துள்ள பிரம்மாண்ட வெற்றியை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது.