டெஸ்ட் கிரிக்கெட்டில் த்ரில் கொடுத்த போட்டிகள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டு வரும் விறுவிறுப்பு அதிகம் இருக்காது என்கிற எண்ணத்தை உடைத்து வருகின்றன சமீபகாலமாக நடைபெறும் போட்டிகள்.  இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன்…

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டு வரும் விறுவிறுப்பு அதிகம் இருக்காது என்கிற எண்ணத்தை உடைத்து வருகின்றன சமீபகாலமாக நடைபெறும் போட்டிகள்.  இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் ஆன நிலையிலும் தொடர்ந்து போராடி ஒரு ரன் வித்யாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது நியூசிலாந்து அணி.

டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் வெற்றி, 10 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி என்கிற வார்த்தைகளையே அதிகம் கேள்விப்பட்டிருப்போம். 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் முன்கூட்டியே முடிவை கணிக்கும் வகையில் ஏதாவது ஒரு அணியின் ஆதிக்கம் ஓங்கி நிற்கும். அணியின் சாதனை, வீரர்களின் சாதனைகளே பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளில் பேசு பொருளாகி வரும் நிலையில் சமீபகாலமாக விறுவிறுப்பும் டெஸ்ட் போட்டிகளில் பேசு பொருளாகி வருகிறது. அந்த வகையில் நேற்று நியூசிலாந்தில் அந்நாட்டு அணி இங்கிலாந்து அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய போட்டி இரு நாட்டு ரசிகர்களையும் ஒரு தினம், டி20 போட்டிகளுக்கு இணையாக விறுவிறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன.

நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்து டெக்ளேர் செய்தது. நியூசிலாந்து தனதுமுதல் இன்னிங்சில் 209 ரன்கள் எடுத்து பாலோ ஆன் ஆனது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சையும் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அதிரடியாக விளையாடி 483 ரன்கள் குவித்தது. வெற்றி பெற 258 ரன்கள் தேவை என்கிற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, 256 ரன்களில் ஆல் ஆவுட் ஆக ஒரு ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றிபெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாலோ ஆன் ஆன அணி வெற்றி பெறுவதும், அதுவும் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெறுவதும் மிகவும் அரிதான ஒன்று. இதற்கு முன்னர்  இது போன்ற த்ரில் வெற்றிகளை கொடுத்த அபூர்வமான சில போட்டிகள் குறித்து காண்போம்.

ஆஸ்திரேலியா vs மேற்கு இந்திய தீவுகள் (1993)

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இரு முறையே  நிகழ்ந்திருக்கிறது. இது இரண்டாவதாக நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் நிகழ்ந்திருந்தாலும், முதல் முறையாக இந்த அதிசயம் 1993ம் ஆண்டு ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான போட்டியின்போது நிகழ்ந்தது. அப்போது மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்தது. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதியபோது, முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 252 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை  தொடங்கிய ஆஸ்திரேலிய அணியை 213 ரன்களுக்குள் சுருட்டினர் மேற்கு இந்திய தீவு பந்து வீச்சாளர்கள். இரண்டாவது இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 146 ரன்களை எடுத்தது. இதையடுத்து வெற்றிபெற 186 ரன்கள் தேவை என்கிற வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடத் தொடங்கியது ஆஸ்திரேலியா, 74 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறிய நிலையில், ஐஸ்டின் லாங்கர் நிதானமாக விளையாடி வெற்றிக்காக போராடினார். அவருடன் 10வது விக்கெட்டுக்கு துணைசேர்ந்த டிம் மேவும் தனது பங்கிற்கு ஆஸ்திரேலிய அணியின் தோல்வியை தவிர்க்க போராடினார். எனினும் 184 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.   இதையடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து (2005) 

2005 ஆண்டு ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆசிஷ் தொடரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் அளவிற்கு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. எட்க்பாஸ்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 282 ரன்கள் என்கிற வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து. அந்த அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் 175 ரன்களுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து தவித்தது ஆஸ்திரேலிய அணி. இனி இங்கிலாந்து அணியின் வெற்றி எளிதாகிவிடும் எனக் கருதப்பட்ட நிலையில் ஷேன்வார்ன் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியினருக்கு பீதியூட்டினர். ஷேர்ன்வார்ன், பிரட் லீ இணை பொறுப்புடன் ஆடி ஸ்கோரை 220 வரை கொண்டு சென்ற நிலையில் ஷேன்வார்ன் அவுட்டானார். இதையடுத்து 10வது விக்கெட்டுக்கு பிரெட் லீயுடன் பந்துவீச்சாளர் மைக்கேல் காஸ்பரேவிச் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கோடுவரை இழுத்துச் சென்றனர். 175 ரன்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து தவித்த தங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்புகூடி வருகிறதே என ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர். எனினும் துரதிருஷ்டவசமாக அணியின் ஸ்கோர் 279ஆக இருந்தபோது  ஸ்டீவ் ஹார்மிசன் பந்து வீச்சில் மேக்கேல் காஸ்பரோவிச் அவுட்டானார். இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா vs மேற்கு இந்திய தீவுகள் (1960)

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டிராவில் முடிந்த பல போட்டிகளை பற்றிக் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் முதல் முறையாக டையில் முடிந்த போட்டி ஒன்றை பற்றிப் பார்ப்போம். 1960ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 453 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 505 ரன்களை எடுத்தது. தனது இரண்டாவது இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 284 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 233 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 232 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்களை இழந்திருந்தது ஆஸ்திரேலிய அணி, இன்னும் ஒரு பந்தே மிச்சமிருந்த நிலையில், அந்த பந்தில் என்ன மாயாஜாலம் நிகழப்போகிறது, வெற்றி யார் பக்கம் கனியப்போகிறது என்கிற எதிர்பார்ப்போடு இரு அணியின் ரசிகர்களும் பதைபதைப்போடு போட்டியை பார்த்தனர். கடைசி பந்து வீசப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர் இயான் மெக்கிப்பில் அந்த பந்தில் ரன் அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பறிபோய்,  போட்டி டையில் முடிந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டையில் முடிந்தது இந்த போட்டிதான்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.