புதுச்சேரியில் காவல்துறையில் நிலவும் பற்றாக்குறையை போக்க அனைத்து பணியிடங்களும் படிப்படியாக நிரப்பப்பட்டு வருவதாக காவல் துறை ஐ.ஜி சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றனர் . இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி காவல் துறை ஐ.ஜி சந்திரன், புதுச்சேரியில் 253 காவலர்கள் பணியிடத்திற்கு 14,173 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 14,045 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதே போல் 26 காவல் துறை ஓட்டுநர் பணியிடங்களுக்கு 881 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 4 விண்ணப்பம் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டை நாளை முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கான்ஸ்டபிள் உடல் தகுதி தேர்வு வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு 500 பேர் அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணிக்கு தேர்வுகள் தொடங்கும். மொத்தம் 20 நாட்கள் தேர்வு நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் காவலர் ஓட்டுனருக்கான தேர்வு வரும் 31 -ம் தேதி தொடங்க உள்ளது. கான்ஸ்டபிள் மற்றும் ஓட்டுநர் ஆகிய 2 பதவிக்கும் விண்ணப்பித்திருப்பவர்கள், இரண்டு தேர்வுகளிலும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் மைதானத்தினுள் வந்தவுடனேயே அவர்கள் கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வரப்படுவர்.புதுச்சேரியில் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த ரோந்து பணிகள் மற்றும் சோதனைகளில் ஈடுப்பட கூடுதலாக காவலர்கள் நியமிக்கபடுவார்கள் என்றும் கூறினார்.
- பி. ஜேம்ஸ் லிசா









