எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள் மே 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4,55,017, மாணவிகள் 4,59,303 தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா இன்று காலை 10 மணி அளவில் வெளியிட்டார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in & www.dge.tn.gov.in அறிவிக்கப்பட்டுள்ள
இணையதள முகவரிகளில் மாணவர்கள் பார்த்தனர். இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள் மே 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







