“நீயே உனக்கு என்றும் நிகரானவன்”

3 வேடங்களில் சிவாஜி நடித்து 15 நாட்களில் தயாராகி வெளியான திரைப்படம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா….? கதை விவாதம், லொக்கேஷன் பார்க்க வெளிநாட்டுக்கு செல்வது, என தயாரிப்பாளரின் தலையில் கை வைக்கும் இந்த கால கட்டத்தில்,…

3 வேடங்களில் சிவாஜி நடித்து 15 நாட்களில் தயாராகி வெளியான திரைப்படம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா….?

கதை விவாதம், லொக்கேஷன் பார்க்க வெளிநாட்டுக்கு செல்வது, என தயாரிப்பாளரின் தலையில் கை வைக்கும் இந்த கால கட்டத்தில், எதுவுமே இன்றி சிவாஜி நடிக்க 15 நாட்களில் தயாரிக்கப்பட்ட படம் பலே பாண்டியா…

1962-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜான் எஃப் கென்னடியால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்தியாவின் கலாச்சார தூதராக அமெரிக்கா சென்ற முதல் கலைஞர் என பெருமை பெற்ற சிவாஜி கணேசன். நியூயார்க்கின் நயாகரா நகரின் ஒருநாள் கௌரவ மேயராக நியமிக்கப்பட்டார்..சிவாஜி கணேசனுக்கு முன் இந்தப் பெருமையைப் பெற்ற ஒரே இந்தியர், ஜவஹர்லால் நேரு மட்டுமே.

அமெரிக்காவுக்கு புறப்படும் முன்பாகவே பலே பாண்டியா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவாஜி. 1962ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி படப்பிடிப்பு அரங்கத்திற்கு வந்தார். 11 நாட்கள் தொடர்ந்து ஸ்டுடியோவிலேயே தங்கியிருந்து திரைப்படத்தில் நடித்து முடித்தார். அதுவும் ஒன்றல்ல 3 வேடங்களில் நடித்தார் சிவாஜி. எம்.ஆர்.ராதா இரு வேடங்களில் நடித்தார். விறுவிறு என படப்பிடிப்பை முடித்து வெளியிட்டார் இயக்குநர் B.R. பந்துலு.

மூன்று இடங்களில் ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை முடித்து அட்டகாசமான நகைச்சுவைப் படம் என கொண்டாடப்பட்டது பலே பாண்டியா. மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்தாலும், அவரது கால்ஷீட் வெறும் 11 நாட்கள் என்பது கூடுதல் செய்தியாகும். பலே பாண்டியா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகக்குறுகிய நாட்களில் ஒரு முழு திரைப்படத்தில் நடித்தவர் என்ற சாதனையை படைத்தார் நடிகர் திலகம்.

இலக்கிய ரசனையுடன், காய் காய் என வரிகள் முடியும் வகையில் அத்திக்காய் பாடலை எழுதியிருந்தார் கண்ணதாசன்…படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதோடு படமும் பெரும் வெற்றி பெற்றது. சிவாஜிக்கும் எம்.ஆர். ராதாவுக்கும் இடையிலான நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடல் காட்சி இன்றும் ரசிக்கிறது.

வாழ நினைத்தால் வாழலாம் பாடல் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கண்ணதாசன், பந்துலு, சிவாஜி என கூட்டணி அமைந்தால் சொல்லத்தான் வேண்டுமா?

பெயருக்கோ, அல்லது பாட்டுக்கோ மட்டுமல்ல, சிவாஜி என்ற மகா நடிகன் என்றுமே அவருக்கு நிகரானவர்தான்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.