டெலிவரி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய அவர், “இக்காலத்தில் தொழில்நுட்பம் புதுப்புது வாய்ப்புகளை உருவாக்கித் தந்து வருகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆனால், கிக் எகானமியின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 15 கோடி பேர் கிக் எகானமியின் கீழ் வேலை செய்கின்றனர். இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
கிக் எகானமியில் இயங்கும் ஸ்விகி, டன்ஸோ, உபர், ஓலா போன்ற நிறுவனங்கள் அதிகப்படியான வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களாக உள்ளன. சரியான நேரத்தில் டெலிவரி செய்வதே இது போன்ற நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கிறது. ஆனால் இதுபோன்ற நிறுவனங்களுக்காக வேலை செய்பவர்கள் தங்களது சொந்த வாகனத்தை வணிக ரீதியாக பயன்படுத்துகின்றனர். டெலிவரி நிறுவனங்களும் இவர்களுக்கு தேவையான வாகனங்களை வழங்குவதில்லை. பெரும் சுமையை சுமந்துகொண்டு உழைக்கும் இவர்களுக்கு ஏதும் எந்த பாதுகாப்பும் இல்லை. ஊழியர்களின் இந்த நிலையை எந்த நிறுவனமும் கண்டுகொள்வதில்லை. விபத்து ஏதும் எற்பட்டாலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு உரிய காப்பீட்டு தொகையை வழங்குவதில்லை” என்று பேசினார்.
இரவு நேரத்திலும் உழைக்கும் இந்த ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாததால் உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது. இது போன்ற சம்பவங்களை தவிர்க்க கிக் எகானமியின் கீழ் இயங்கும் டெலிவரி நிறுவனங்களுக்கு சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து ஊழியர்களுக்கு இந்த அரசு உதவ வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேசினார்.







