”மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் : அறிவிப்பு விரைவில்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

”மகளிர் உரிமைத் தொகைக்கு  விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட…

”மகளிர் உரிமைத் தொகைக்கு  விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்தன. அதன்படி தீர்மானத்தின் மீது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தெரிவித்ததாவது..

” திமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை என வாக்குறுதி அளித்தபடி 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை  வழங்கப்பட்டுள்ளது. ஆனால்  தகுதியானவர்கள் பலருக்கும் கூட மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை.” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் பேசியதாவது..

“ தகுதியான ஏழைப் பெண்களுக்கான உன்னதமான திட்டம் இது.  இந்த திட்டத்தால்  பெரும்பாலான குடும்பங்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும். ஆனாலும் பல லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்த திட்டம்  கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்களுக்கு கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக  சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் தெரிவித்ததாவது..

” ஒரு கையில் குழந்தையையும், ஒரு கையில் செல்போனையும் வைத்துக்கொண்டு அரசு அலுவலகங்களில் பெண்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். வருமான உச்ச வரம்பு, கார் வைத்திருப்பது என நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்கள், விழிம்பு நிலை மக்கள் அனைவருக்கும் வழங்குவதாக தெரிவித்தார் முதலமைச்சர். ஆனால் வசதி படைத்தவர்கள் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது” என தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் திட்டத்தின் மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..

” மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அக்கறையுடன் கவன ஈர்ப்பை கொண்டு வந்துள்ளனர். மகளிர் ஒவ்வொருவரும் முதலமைச்சரை கொண்டாடி வருகிறார்கள். 1.62 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முழுக்க முழுக்க தகுதி வாய்ந்த 1.06 கோடி மகளிர் தேர்வு செய்யப்பட்டனர்.

மகளிர் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் யார் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் ? என தீர்மானிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே வகைப்படுத்தப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர், முதியோர் உதவித்தொகை பெறுவோரும் பயன்பெறும் வகையில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன.

இந்த திட்டத்தின் மூலம் 2,06,000 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர். திருநங்கைகளுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. எந்தத் திட்டத்திலும் மேல்முறையீடு இருக்காது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையிடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

பயனாளிகளாக தகுதியானவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம். நவம்பர் 30 ஆம் தேதிக்குள் உரிய தீர்வு கிடைக்கும். குடும்ப அட்டை வைத்துள்ள 64 இலட்சம் பேர் தாங்களாகவே புரிந்துகொண்டு விண்ணப்பம் அளிக்கவில்லை, அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.