தூத்துக்குடி துப்பாக்கி சூடு | அதிகாரிகள் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை 3 மாதங்களுக்குள் சேகரிக்கும்படி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : “ரிவ்யூ பண்றத விட்டுட்டு ரீல்ஸ் பண்ண போலாம்” – வெளியானது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் டிரெய்லர்!

அந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜோய்மாலா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 24ம் தேதி மீண்டும் விசாரிக்க இருந்தது. நேரமின்மை காரணமாக விசாரணையை ஏப்.30-ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஏப்.30) விசாரணைக்கு வந்தது. அப்போது, “துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை தாசில்தார்கள் 3 பேரின் சொத்து விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணைக்கு பிறப்பித்த தடை உத்தரவு தொடரும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.