இப்படித்தான் வாக்கு திருட்டு நடந்தது – ராகுல் பதிவு!

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வாக்குத்திருட்டு குறித்து தான் நேற்று பேசிய காணொலி ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி  இந்திய தேர்தல் ஆணையமானது மத்திய பாஜக அரசுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் தனது குற்றச்சாட்டு தொடர்பாக பல்வேறு ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில்  நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில்,  ராகுல் காந்தி மீண்டும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். இச்சந்திப்பின் போது கர்நாடக மாநில ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்ததால் அவை தடுத்து நிறுத்தப்பட்டதாவும் தெரிவித்தார். மேலும் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையமானது  ராகுலின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதார மற்றவை என்று  மறுத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று பேசிய காணொலி ஒன்றை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

”அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறார்கள். 36 வினாடிகளில் 2 வாக்காளர்களை நீக்குகிறார்கள். பின்னர் மீண்டும் தூங்கச் செல்லுகிறார்கள். இப்படித்தான் வாக்கு திருட்டு நடந்தது. தேர்தல் கண்காணிப்புக் குழு விழித்திருந்து இந்த  திருட்டைப் பார்த்துக் கொண்டிருந்தது, திருடர்களைப் பாதுகாத்தது”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.