பரபரப்புடன் நிறைவடைந்த பொதுக்குழு – நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?

பொதுக்குழு நிறைவடைந்த நிலையில், அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன…

பொதுக்குழு நிறைவடைந்த நிலையில், அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் ஒற்றைத் தலைமை குறித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லாமல் போனது. இது இபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பொதுக்குழுவுக்கு வந்த ஓபிஎஸ்-க்கு எதிராக தொடர் முழக்கங்கள் வந்த வண்ணமிருந்தன. தொடர் சர்ச்சைகளுக்கு இடையே, ஓபிஎஸ் கூட்டத்திலிருந்து பாதியிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் அடுத்த பொதுக்குழுவில் நிச்சம் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஒற்றைத் தலைமை குறித்தும் நடந்து முடிந்த பொதுக்குழு குறித்தும் அதிமுக நிர்வாகிகள் சிலர் பேட்டியளித்தனர்.

முதலில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “அடுத்த பொது குழுவில் ஒற்றை தீர்மானம் பற்றி நிச்சயம் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதில் இந்த 23 தீர்மானம் இல்லாமல் ஒற்றை தலைமை தீர்மானத்தை அவை தலைவர் கொண்டு வருவார்” என்று கூறினார். இவரைத் தொடர்ந்து பேசிய மா.ப.பாண்டியராஜன், “அடுத்த பொதுக்குழுவே ஒரு சட்டப்படியான நடவடிக்கையாக பார்க்கிறோம். தற்போது நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டம் எழுச்சியுடன் நடந்து முடிந்துள்ளதாக பார்க்கிறேன்” என்று கூறினார்.

அதேபோல, “சுமுகமாக பொதுக்குழு நடந்து முடிந்துள்ளது. இந்த பொதுக்குழுவில், ஆதரவும் இருக்கும் எதிர்ப்பும் இருக்கும். ஆனால் யாரும் அவமானப்படுத்தபடவில்லை. அடுத்த பொதுக்குழுவில் நிச்சயம் ஒற்றை தலைமை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும்” என ஆர்.பி. உதயகுமார் கூறியுனார்.

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், “ஒற்றை தலைமை கோரிக்கையை பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் வைத்துள்ளனர். அடுத்த பொதுக்குழுவை சுமூகமாக ஒற்றுமையுடன் நடத்துவோம்.” என்றும் பேட்டியளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.