முக்கியச் செய்திகள் தமிழகம்

“இது ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை நசுக்கும் முயற்சி” – சுகிர்தராணி

ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை நசுக்குகின்ற முயற்சியாகத்தான் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆளுமைகளின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது என எழுத்தாளர் சுகிர்தராணி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகள், டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களான பாமாவின் “சங்கதி” மற்றும் சுகிர்தராணியின் “கைம்மாறு என்னுடல்” படைப்புகள் மற்றும் மகாஸ்வேதா தேவியின் சிறுகதையான “திரௌபதி” ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. நேற்று நடந்த பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதில் சுல்தானாவின் கனவு என்ற புத்தகமும், ராமாபாயின் படைப்புகளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. டெல்லி பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவில், பழங்குடி, பட்டியலின சமூகத்திலிருந்து ஒரு உறுப்பினர் கூட இடம்பெறவில்லை என தெரிகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்புகளை நீக்கியிருப்பதில் உள்நோக்கம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு கவிஞர் சுகிர்தராணி அளித்த பேட்டியில், “சமூகத்திற்கான, மக்களுக்கான எழுத்துக்களை தொடர்ந்து எழுதுவோம். எங்களின் குரல்களை மறைக்கவும் மறுக்கவும் முடியாது. ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை நசுக்குகின்ற முயற்சியாகத்தான் இந்தப் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “டெல்லி பல்கலைக்கழகம் ஆங்கில இலக்கியத் துறையில் இருந்து தமிழ் படைப்புகள் நீக்கப்பட்டடுள்ளது குறித்து பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான முன்னறிவிப்பு எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் குரலாகதான் எங்களின் குரல் இருக்கிறது. இந்தக் குரல்களை நசுக்குகின்ற செயலாகத்தான் இந்நிகழ்வை பார்க்கிறேன். நாங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் படைப்புகளாக படைத்தவர்கள் அல்ல. ஒட்டுமொத்தமாக அனைத்து பெண்களுக்கான, விளிம்பு நிலை மக்களுக்கான படைப்பாக எழுதியிருக்கிறோம். பல்கலைக்கழகத்தின் மேற்பார்வை குழுவின் பரிந்துரையின் பேரில்தான் பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது. கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர்தான் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை நசுக்குகின்ற முயற்சியாகத்தான் இந்தப் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது.

தலித் மக்களின் படைப்புகளை நீக்கிவிட்டு உயர்சாதியினரின் படைப்புகளை பதிலீடாக வைத்துள்ளார்கள். ஒன்றிய அரசு சார்பாக உள்ள படைப்பாளர்கள் மற்றும் படைப்புகளை சேர்த்துள்ளார்கள். கருத்தியலுக்கு எதிரான படைப்புகள், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கான படைப்புகளை நீக்கியுள்ளார்கள். இதன் மூலம் எங்களின் குரல்களை மறைக்கவும் மறுக்கவும் முடியாது. சமூகத்திற்கான மக்களுக்கான எழுத்துக்களை தொடர்ந்து எழுதுவோம். எங்களின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அளவில் சென்று சேர்ந்துவிட்டது. உலகத்தால் நாங்கள் முன்னரே அறியப்பட்டவர்கள்தான், அரசுக்கு எதிரான எதிர்க்குரலை எழுப்பவர்களை ஒடுக்குகிறார்கள்.

எங்களுடைய எழுத்துக்கள் சாதியற்ற அரசியல் பொருளாதார தாழ்வுகள் அற்ற சமூகத்தை நோக்கி நகர்த்துகிறது. அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டு குரலாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதே என் கருத்து.” என்று சுகிர்தராணி கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தேர்தல் விதிமுறையை கூறி மகாத்மா காந்தி சிலை மூடல்!

Jeba Arul Robinson

இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

Niruban Chakkaaravarthi

புதுச்சேரியில் இன்று 2 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா; நெருக்கடியில் நாராயணசாமி அரசு!

Gayathri Venkatesan