தலைமைச்செயலகத்தில் அரசுத் துறைகளில் பயன்பாட்டில் உள்ள கோப்புகள் பயன்பாட்டை படிப்படியாக நீக்கி கணினிமயமாக்கும் திட்டமே E – Office என்ற மின் அலுவலக திட்டம்.
இந்த திட்டத்தை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்திருந்தார். அதனை செயல்படுத்தும் பணிகளை துறை ரீதியாக மேற்கொள்வதற்காக ரூ 13,44,27,904 நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கான அரசாணையை தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ளார்.
திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்?
திட்டத்தை செயல்படுத்த தேவையான மென்பொருள் பயனர் உரிமம் தேசிய தகவல் மையத்திலிருந்து (NIC) பெறப்படுகிறது.
சென்னை பெருங்குடியில் உள்ள மாநில தரவு மையத்தின் தேசிய அறிவு நெட்வொர்க் (NKN), தமிழ்நாடு மாநில அளவிலான பகுதி நெட்வொர்க் (TNSWAN) இணைப்பு மின் அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
மின் அலுவலகத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
- முறையான கோப்பு உருவாக்குவதற்ககும், பராமரிப்பதற்கும் பங்கு அடிப்படையிலான உள்நுழைவு (login) வழங்கப்படுகிறது.
- LDAP (Light weight Directory Access Protocol) அடிப்படையிலான உள்நுழைவு அங்கீகாரம், அலுவலக மின்னஞ்சலுடன் ஐடி அங்கீகாரம் பெற்ற அரசு ஊழியர்கள் மட்டுமே உள்நுழைந்து தங்கள் அதிகாரப்பூர்வ கோப்புகள் தொடர்பான செயலாக்க பணிகளை மேற்கொள்ள முடியும்.
- ஒவ்வொரு தனிநபருக்கும் மேலாண்மை தகவல் அமைப்பு (Management Information System) மூலம் அறிவிப்புகள், பல வகைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் தானியங்கி முறையில் உருவாக்கப்படும்.
- 24*7 என்ற அளவில் எப்போதும் தரவுகள் கிடைக்கும்.
- எந்தவொரு தகவல்தொடர்பு மட்டத்திலும் உயர் அலுவலரின் கையொப்பத்தை அங்கீகரிக்க மற்றும் சரிபார்க்க ஆவணங்களில் டிஜிட்டல் கையொப்பம்.
- KMS (Knowledge Management System) மூலமாக ஆன்லைன் அறிவிப்பு பலகை மூலம் அரசின் கொள்கைகள், படிவங்கள், சட்டங்கள், ஒழுங்குமுறைகள், சுற்றறிக்கைகள், வழிகாட்டுதல்கள், தரநிலைகள், வருடாந்திர அறிக்கைகள், அலுவலக உத்தரவுகள் மற்றும் கையேடுகள் போன்ற அனைத்து ஆவணங்களும் அனைவரின் பார்வைக்காக வெளியிடப்படும்.
- முன்னதாக உள்ள கோப்புகளை தேடுவதற்கு மேம்பட்ட தேடல் முறைகள் வழங்கப்படும். இதன் மூலம் ஒரு ஆவணத்தைத் எளிதாக தேட முடியும்.
- எந்தவொரு அரசு ஊழியரும் உருவாக்கிய கோப்புகள் அதற்கான விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், டிஜிட்டல் கையொப்பத்துடன் நேரம் மற்றும் தேதி முத்திரையுடன் ஒப்புக்கொள்ளப்படும்.
- நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து அறிவிக்க நினைவூட்டல்கள் வழங்கப்படும்
- அரசு அலுவலகங்களில் பெறப்பட்ட தபால்கள் முறையாக கண்காணிக்கப்படும்.
- கோப்புகளின் தற்போதைய நிலையை கண்காணிக்கும் பணிகளை திறம்பட செய்ய முடியும்.
- கோப்புகளின் செயல்பாட்டில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான செயலாக்கம் மூலம் மக்கள் பயனடைவார்கள்.
1100 கணினிகள், அதற்கான இணைப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் கோப்புகள் இல்லாத அலுவலகங்களாக தலைமைச்செயலகத்தின் அறைகள் மாறவுள்ளது. காகித பயன்பாட்டை குறைத்து, மனித ஆற்றலை குறைத்து செயல்பாட்டின் வேகத்தை அதிகரிக்கும் இதுபோன்ற திட்டங்கள் தமிழகமெங்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்….








