திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சைவத் தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுவது வழக்கம். பெயருக்கு ஏற்றார் போல் 96 அடி உயரமும், 360 டன் எடையும் கொண்ட ஆழித்தேர் 4 ரத வீதிகளில் பிரம்மாண்டமாக வலம் வரும். நடப்பாண்டுக்கான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அஜபா நடனத்துடன் கோயிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து இன்று காலை ஆழித்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதனை அடுத்து அமைச்சர்கள் சேகர் பாபு, மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து பச்சைக்கொடி காட்டியவுடன் ஆரூரா! தியாகேசா!! என விண்ணதிர முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பின்னர், நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த திருவாரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கலைவானன், ஆறு ஆண்டுகளுக்கு பின் முறைப்படி அஸ்த நட்சத்திரத்தில் கொடி ஏறி ஆயில்யம் நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை போல் கோயில்களும் அதிகமாக உள்ள நிலையில், பக்தர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆழித்தேர்திருவிழா நடைபெற்றதாக குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








