திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியின் 50ஆம் ஆண்டு பொன்விழா விமரிசையாக நடைபெற்றது.
வேம்புலி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியன்று அலங்கரிக்கப்பட்ட வேப்பிலை பூகரகம் ஊர்வலமாக வந்தது. அப்போது பெண்கள் கூழ் ஊற்றி வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து, பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்த புஷ்ப பள்ளக்கில் வேம்புலி அம்மன், அன்னபூரணி, மாகாளி, காமாட்சி அம்மன் ஆகியோர் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஊர்வலத்தில் தாரை தப்பட்டை, நாதஸ்வரம், செண்டி மேளம், பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம் என வான வேடிக்கையுடன் பூ பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக திரைப்பட இசையமைப்பாளர் தீனா கலந்துகொண்டு இன்னிசை கச்சேரியை நடத்தினார். கச்சேரியை ஆரணி கோட்டை மைதானத்தில் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.







