திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜராகியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரில் வைத்திருந்த தனது நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அந்தக் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அவா் ஜூன் 28-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் தனிப்படை போலீஸாா் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில் அறிக்கையை வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிஐ காவல் துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமார் நியமிக்கப்பட்டார்.

சிபிஐ தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மடப்புரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேற்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மடப்புரம் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக் வேல், பிரவீன் குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், செக்யூரிட்டி வினோத் குமார் மற்றும் நவீன் குமார் ஆகியோர் இன்று மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் ஓட்டுனர் கார்த்திகேயன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் அஜித்குமாரின் சகோதரர் நவீன் மற்றும் அஜித் குமாருடன் காவலராக பணிபுரிந்த பிரவீன் குமார், வினோத்குமார் ஆகிய 5 பேரும் இன்று மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.