நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த அவரை, மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பாலேந்திர ஷா இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த மார்ச் 2026-ல் நேபாள பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். மேலும், பிரதமர் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் வெளிநாட்டுப் பயணமும் இதுவாகும்.
இந்தப் பயணத்தின்போது, இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசுகிறார். நாளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடனும் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியா – நேபாளம் இடையிலான உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் இரு நாட்டுப் பிரதமர்களும் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள உள்ளனர். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைகிறது. இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கையின் கீழ் நேபாளத்துடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தையும் இந்தப் பயணம் வெளிப்படுத்துகிறது.
இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் பரஸ்பரப் பயனளிக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வாய்ப்பளிக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் நேபாளம் இடையே வரலாறு, கலாசாரம், நாகரிகம் மற்றும் மக்களிடையேயான நெருங்கிய தொடர்புகளின் அடிப்படையில் நட்புறவு நீடித்து வருகிறது. வர்த்தகம், எரிசக்தி, நீர்வளங்கள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.
மேலும், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட புதிய துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.




