ஒடிசா ரயில் விபத்தில் பெண் ஒருவர் தனது கணவர் இறந்ததாக கூறி அவர் அளித்த சான்றிதழ் போலி என தெரியவந்ததையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவரே புகார் அளித்ததையடுத்து, தலைமறைவான அந்த பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 301 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில்,விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, ரயில்வேத்துறை சார்பாக ரூபாய் 10 லட்சமும், பிரதமர் மோடி தனது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், ஒடிசா அரசு 5 லட்சமும் நிவாரணமாக அறிவித்தது. இதனை கேள்விப்பட்டவுடன், அந்த நிவாரண தொகை அனைத்தையும் தாமும் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தின் மனியாபந்தா பகுதியை சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்ற பெண். அதற்காக கடந்த 13 ஆண்டுகளாக தனது கணவர் பிஜய் தத்தாவை பிரிந்து வாழும் அவர், தன்னுடைய கணவர் ரயில் விபத்தில் இறந்துவிட்டதாக கூறி, சில சான்றிதழ்களை அளித்து, நிவாரண தொகையை வழங்கும்படி அதிகாரிகளிடம் மனு செய்துள்ளார். அந்த பெண் அளித்த சான்றிதழ்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அது போலி என்பதை கண்டுபிடித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கீதாஞ்சலியை தொடர்புகொண்டு நேரில் வரவழைத்த காவல்துறையினர் ,அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர். இச்சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த கீதாஞ்சலியின் கணவர் பிஜய் தத்தா அரசு பணத்தை மோசடியாக பெற முயன்றதற்கும், போலி சான்றிதழ்களை பெற முயன்றதற்கும் மனைவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணிபண்டா என்ற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உடனே அந்த காவல்நிலையத்தின் பொறுப்பாளர் விபத்து நடந்த பஹாநகர் காவல்நிலையத்திற்கு சென்று இந்த புகாரை அளிக்கும்படி கூறவே, அவரும் அதன்படி சென்று புகார் மனு அளித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை போலியாக உரிமை கோருபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே மற்றும் ஒடிசா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கணவரின் தன்மீது அளித்துள்ள புகாரை கேள்விப்பட்ட கீதாஞ்சலி எங்கு தாம் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் தலைமறைவாகி விட்டார். தற்போது அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








