நெல், உளுந்து உள்ளிட்டவைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிரடியாக உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்துறை…

நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக நாட்டின் பொருளாதாரம், உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களின் நிலை உள்ளிட்டவைக் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அத்துடன், மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்துவது குறித்தும் நாடாளுமன்றத்தில் புதிய மசோதாக்களை தாக்கல் செய்வது குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது:

  • நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை, பாசிப்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்த்தப்படுகிறது.
  • பருத்தி, கம்பு, உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையும் அதிகரிக்கப்படுகிறது.
  • நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3,750-ல் இருந்து ரூ.6.620 ஆக உயர்த்தப்படுகிறது.
  • சோயா பீன்ஸ்-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,560ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் 4,000 ரூபாயிலிருந்து 6,377 ரூபாயாக அதிகரிப்பு
  • சூரியகாந்தி விதை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் 3,750 ரூபாயிலிருந்து 6,760 ரூபாயாக அதிகரிப்பு
  • சோயா பீன்ஸ் ஒரு குவிண்டால் ரூ.2,560-ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

ஹுடா சிட்டி சென்டரில் இருந்து சைபர் சிட்டி, குருகிராம் மற்றும் ஸ்பர் முதல் துவாரகா எக்ஸ்பிரஸ்வே வரை மெட்ரோ இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.5,452 கோடி செலவாகும் என்றும் பியூஸ் கோயல் கூறினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பது விவசாயப் பொருட்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையாகும். இந்த விவசாயப் பொருட்களின் சந்தை செலவை விட குறைவாக இருந்தால் நேரடியாக அரசாங்கத்தால் விவசாயிகளிடமிருந்து பொருட்கள் வாங்கப்படும். இது விவாசாயிகள் நஷ்டமடைவதைத் தடுக்கவும், விவசாய பொருட்களை வாங்குபவர்கள், மிக குறைந்த விலைக்கு கேட்டு, விவசாயிகளை நஷ்டப்படுத்தாமல் இருக்கவும் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசாங்கம் நிர்ணயம் செய்ய, பல்வேறு விஷயங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, பயிர்களை விளைவிக்க ஆகும் செலவு, சந்தையில் அந்த பொருளுக்கான அப்போதைய மதிப்பு, இந்த விலை கொடுத்து அந்த பொருளை வாங்கினால், மானியம் என்ற அடிப்படையில் அரசு எவ்வளவு செலவு செய்ய வேண்டிம்?, தற்போதைய நிதி நிலைமையில் எவ்வளவு பணத்தை இந்த மானியத்திற்கு செலவு செய்ய முடியும்? என்பது போன்ற பல்வேறு காரணிகள் மத்திய அரசால் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு சிறு, குறு தானியங்களுக்கான ஆண்டாக சர்வதேச அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே விவசாயிகள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தது.

குறிப்பாக நெல்லுக்கு அரசு கொள்முதல் நிலையங்கள் அமைத்து, நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வாங்குவதைப்போல, சிறு, குறு தானியங்களுக்கும் அரசு கொள்முதல் மையம் அமைக்கவேண்டும். அரசே கொள்முதல் செய்தால், கூட்டுறவு ரேஷன் கடை, சூப்பர் மார்க்கெட் மூலம் நுகர்வோருக்கு குறைந்தபட்ச விலையில் விற்கமுடியும். விவசாயிகளுக்கும் சரியான விலை கிடைக்கும். ஒரே நேரத்தில் இடைத்தரகர் இன்றி, நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இருவரும், பயன்பெற முடியும். அதற்கு முன்பாக குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்டவை விவசாயிகளின் கோறிக்கையாக இருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முல் விலையை உயர்த்தியிருப்பது, விவசாயிகளுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் விஷயமாகவே பரக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.