“ஸ்டேடியம் கட்டி, ஜல்லிக்கட்டை கொச்சைப்படுத்தி விட்டார்கள்” – அமைச்சர் நிர்மல்குமார்

அந்தந்த ஊர்களில் நடப்பதுதான் ஜல்லிக்கட்டுக்குப் பெருமை; இவர்கள் ஸ்டேடியம் கட்டி, கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

ஆர்.பி.உதயக்குமார் குறித்த கேள்விக்கு, “அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தனது இருப்பை காட்டிக் கொள்ள ஒவ்வொரு நாளும் வீடியோ வெளியிட்டு வருகிறார். சிறிது நாட்களில் அதிமுகவிற்கு நான்தான் பொதுச்செயலாளர் என தெரிவிப்பார். அதிமுகவை முழுமையாக சீரழித்ததற்கு ஆர்.பி.உதயகுமார் தான் காரணம்” என்றார்.

ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்.எல்.ஏ கருப்பையா கூறிய கருத்து சர்ச்சையனது தொடர்பான கேள்விக்கு, “திமுக ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்டியதே, அதை “கலைஞர் மைதானம்” என்று போடுவதற்காகத்தான்; ஜல்லிக்கட்டு என்பது அந்தந்த ஊரின் பெருமை. அவனியாபுரம், பாலமேடு இப்படி அந்தந்த ஊர்களில் வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டை கொண்டாடி வருகின்றனர்; ஜல்லிக்கட்டு என்பது என்டர்டெயின்மென்ட் கிடையாது; அது நமது கலாச்சாரம், நமது உணர்வு; விளையாட்டு மைதானம் கட்டி, ஜாலியாக உட்கார்ந்து பார்க்கும் நிகழ்வு கிடையாது; அந்தந்த ஊர்களில் ஜல்லிக்கட்டு நடப்பதுதான் அந்தந்த ஊருக்குப் பெருமை; இவர்கள் ஸ்டேடியம் கட்டி, ஜல்லிக்கட்டை கொச்சைப்படுத்தி விட்டார்கள்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.